சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை கூடியதும் பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க செங்கோட்டையன், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எழுந்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் அவையை விட்டு அப்பாவு வெளியேறினார். பேரவை துணைத் தலைவர் அவையை நடத்தினார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவை தலைவர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும், அனைத்து உறுப்பினர்களையும் சமமாக நடத்த வேண்டியது அவரது கடமை என்றும் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், பேரவைத் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதாக கூறினார்.
இதனிடையே விவாதத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதும் பாசமும், பற்றும் உடைய பேரவைத் தலைவர், அமளியில் ஈடுபடுவர்களை அமைதிப்படுத்தவே விரும்புவார் என்றும், அதிமுகவின் உட்கட்சி பிரச்னையை திசைதிருப்ப நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுவதாகவும் விமர்சித்தார்.
தொடர்ந்து குரல் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து டிவிஷன் அடிப்படையில் நடத்தப்பட்ட எண்ணி கணிக்கும் வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் குரல், டிவிஷன் என இருமுறைகளிலும் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் தனது இருக்கையில் பேரவைத் தலைவர் அப்பாவு அமர்ந்தார்.
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாமக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்திற்கு 154 பேர் எதிர்ப்பும், 63 பேர் ஆதரவும் தெரிவித்தனர்.