பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரனின் கோரிக்கையின்படி தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன், வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றில் மழைக்காலங்களில் பெருமளவு தண்ணீர் கடலில் கலக்கிறது என்றும், அதனை தடுக்க குறைந்தபட்சம் 5 இடங்களிலாவது தடுப்பணைகள் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பாஜக உறுப்பினரின் கோரிக்கை மிகவும் அவசியமானது என்றும், பாஜக உறுப்பினரின் அத்தியாவசியமான கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேபோல், சாத்தனூர் அணையை பாதுகாக்க சிறப்பு செயலாக்க திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், நீர்வளத்துறையின் நிதி நிலையை வைத்து அங்கொன்றும், இங்கொன்றும்தான் அணை கட்ட முடியும் எனக்கூறிய அமைச்சர் துரைமுருகன், ஒரு இடத்தில் அணை கட்ட வேண்டும் என்று தெரிந்தும், நிதி நிலை காரணமாக அங்கு தடுப்பணை கட்ட முடியவில்லை என தெரிவித்தார்.