தமிழக வேளாண் பட்ஜெட்டில் அத்திக்கடவு – அவினாசி இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை , திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு, நீர் எடுத்து செல்லும் வகையில், அத்திக்கடவு – அவினாசி நீரேற்று திட்டத்தை, நீர்வளத்துறைச் செயல்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஈரோடு காளிங்கராயன் அணையிலிருந்து, காவிரி உபரிநீரானது குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு ஆயிரத்து 45 குளம், குட்டைகளில் நிரப்பப்படுகின்றன.
மேலும் இதுவரை ஆயிரத்து 30 குளங்கள் நிரம்பியுள்ளன. இதேபோல் மூன்று மாவட்டங்களில் எஞ்சியுள்ள வறட்சியான குளங்களுக்கு, நீர் எடுத்துச் செல்லும் வகையில், அத்திக்கடவு – அவினாசி இரண்டாம் கட்ட திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பட்ஜெட்டில் திட்டத்திற்கு எவ்வித நிதியும் ஒதுக்காதது தங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.