கோவையில் கணவர் மற்றும் இரு பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு தங்கள் மகள் 2-வதாக ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக பெற்றோர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மதம் மாறி காதல் திருமணம் செய்துகொண்ட விஜய சாமுண்டீஸ்வரி என்ற இளம்பெண் அண்மையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தான் ஒரு இஸ்லாமியரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டதை ஏற்க முடியாமல், தனது பெற்றோர் தங்கள் மீது காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்துள்ளதாகவும், தங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
பெற்றோரால் தங்கள் உயிருக்கு ஆபத்திருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அதில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜய சாமுண்டீஸ்வரிக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளதாகவும், அவர்களை தவிக்கவிட்டு விட்டு தங்கள் மகள் வேறு ஒருவரை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டதாகவும், விஜய சாமுண்டீஸ்வரியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அதில், விஜய சாமுண்டீஸ்வரியின் குழந்தைகள் என கூறப்படும் இரு பெண் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு பேசியுள்ள அவர்கள், எதையும் விசாரிக்காமல் தனது மகளை ஜமாத் நிர்வாகிகள் மதம் மாற்றி திருமணம் செய்து வைத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், விஜய சாமுண்டீஸ்வரியின் அடையாள ஆவணங்களையும், அவருக்கு திருமணமானதற்கான ஆதாரங்களையும் அவர்கள் வீடியோவில் இணைத்துள்ளனர். இளம் பெண்ணின் பெற்றோர் வெளியிட்ட இந்த வீடியோ அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.