திருச்சியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுத்து அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த கண்ணனூர் பாளையத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. அய்யம்பாளையம், வீரமச்சம்பட்டி, கிளியனூர்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து இங்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் கொள்முதல் செய்யக் கொடுத்த நெல்லை அள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். தொடர்ந்து உயர் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் நிலைய அதிகாரிகள் பல்வேறு காரணங்களைக்கூறி விவசாயிகளை அலைக்கழிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.