ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மோசடியாக நிலத்தைப் பத்திரப் பதிவு செய்து வீட்டை இடித்துத் தள்ளிய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜ் என்பவருக்குச் சொந்தமான வீட்டை ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து குத்தகைக்கு வாங்கி மாணிக்கம் என்பவர் வசித்து வந்தார்.
தொடர்ந்து ராஜ் வீட்டை விற்பனை செய்வதாகக் கூறி மாணிக்கத்திடம் 11லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு, ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் ராஜிக்கு சொந்தமான நிலத்தைச் செல்வம் என்பவர் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்து வீட்டை காலி செய்யுமாறு தகராறு செய்துள்ளார். மேலும் திமுக நிர்வாகிகளை அழைத்துச் சென்று வீட்டினை ஜேசிபி மூலம் இடித்துத் தள்ளியுள்ளார். இது குறித்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.