கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் அளித்த புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார்.
அப்போது அவர், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மூன்று மாதங்களுக்கு முன்பே ஜாகிர் உசேன் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
யார் மீது புகார் அளித்துள்ளாரோ அவர்களை அழைத்தே காவல்துறை கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேபோல்,திமுகவின் தோழமை கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஷாநவாஸ் உள்ளிட்டோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.