கோவையில் மழைநீர் வடிகால் அமைக்கப் பலமுறை வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை எடுக்காததால், குடியிருப்பு வாசிகளே தங்கள் சொந்த செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குனியமுத்தூர், குறிஞ்சி நகர் ஃபேஸ்-2 பகுதியில், சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மழைநீர் வடிகால் இல்லாததால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி உதவியாளர் குமரன் என்பவரிடம் NOC பெற்ற அப்பகுதி மக்கள், ஒரு குடும்பத்திற்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்து, தங்கள் பகுதியில் 290 மீட்டர் நீளம் கொண்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மழைநீர் வடிகால் அமைக்க 15 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், குடியிருப்பு வாசிகளிடம் வசூல் செய்த 9 லட்சம் ரூபாய் போக மீதமுள்ள 6 லட்சம் ரூபாயை அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.