சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
2006 – 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில், செம்மண் முறைகேட்டில் கிடைத்த பெருந்தொகையை வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ததாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராகச் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், 6 பேரும் நேரரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
அதன்படி, அமைச்சர் பொன்முடி அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது மனுதாரர் தரப்பில், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை தரப்பு பதிலளிக்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.