வீண் பெருமைக்காக விளம்பர அரசியலுக்காக ஒன்றை செய்யாமல் ஆத்மார்த்தமாக மக்களுக்கு சேவை செய்ய முயற்சிப்பதே தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மரியாதை சேர்க்கும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மனித இனத்தையே அழித்து வரும் மதுக்கடைகள் மீது தமிழக அரசுக்கும், திராவிட மாடல் முதல்வருக்கும் இருக்கும் அக்கறை மனித உயிர்களை காக்கும் மலிவு விலை மருந்துக்கடைகள் மீது இல்லை என்பதே உண்மை என எச். ராஜா தெரிவித்துள்ளார்
தமிழக மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்தாமல்… தற்பெருமைக்காக திட்டங்களை செயல்படுத்தினால், இப்படித்தான் இருக்கும்..!! மனித உயிர்களை காக்க மத்திய அரசின் மூலம் பிரதம மந்திரி மக்கள் மருந்தகம் என்கிற பெயரில் நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்களை திறந்து வைத்து அத்திட்டத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக செயல்படுத்தி வரும் வேளையில், வழக்கம் போல மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டியும், அப்படியே காப்பியடித்தும் வேறு பெயரில் அத்திட்டங்களை அறிவித்து தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் திறனற்ற திராவிட மாடல் ஆட்சியின் பயனற்ற முதல்வர் ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்கள் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் 1000 மருந்தகங்களை திறப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.
அவர் திறந்து வைத்த மருந்தகங்களில் போதிய மருந்துகளே இல்லாமல் பெயருக்கு வெறும் கடை மட்டும் தான் இருக்கிறது என்கிற தகவல்கள் மக்களிடம் இருந்து தொடர்ந்து விமர்சனங்களாக வந்து கொண்டிருக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுவகைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது, மது பாட்டில்கள் தட்டுப்பாடு! போதிய மது வகைகள் இல்லாததால் விற்பனை பாதிப்பு! என்று பத்திரிக்கைகளில் ஒரு நாளாவது செய்தி வந்திருக்கிறதா? மதுபான கடைகள் மீதும் மதுபான விற்பனை மீதும் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் இருக்கின்ற அக்கறையில் ஒரு சதவீதமாவது மனித உயிர்களை காக்கும் மலிவு விலை மருந்தகங்கள் மீது இருந்திருக்குமேயானால் இதுபோன்ற விமர்சனங்கள் எழுவதற்கும், மருந்துக்கடைகளில் போதிய மருந்துகள் இல்லை என்கிற நிலை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருந்திருக்காது என தெரிவித்துள்ளார்.
இனியாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் வீண் பெருமைக்காக விளம்பர அரசியலுக்காக ஒன்றை செய்யாமல் ஆத்மார்த்தமாக மக்களுக்கு சேவை செய்ய முயற்சிப்பதே அவர் வகிக்கும் பொறுப்புக்கு மரியாதை சேர்க்கும் என எச். ராஜா தெரிவித்துள்ளார்.