வைகை அணை நீர்த்தேக்கத்தில் கழிவுநீர் கலந்ததால், தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சியளித்தது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 59 புள்ளி 61 அடியாக உள்ளது. அணைக்குக் கடந்த சில வாரங்களாகவே நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் வைகை அணையில் தேங்கி இருக்கும் தண்ணீர் பச்சை நிறமாக மாறி காட்சியளிக்கிறது. வைகை ஆறு மற்றும் முல்லைப் பெரியாற்றில் அதிகளவு கழிவுநீர் கலப்பதாலும், நீண்ட நாட்கள் தேக்கி வைத்திருப்பதாலும் தண்ணீர் பச்சை நிறமாக மாறி உள்ளதாகக் குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், இதனை விவசாயத்திற்கு 5 மாவட்ட மக்கள் பயன்படுத்தும் நிலையில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.