போடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் முதலமைச்சரின் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் மெகா ஊழலுக்கு எதிராக பாஜகவினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் சுவரில் முதலமைச்சர் ஸ்டாலினின் படம் ஒட்டப்படும் என அறிவித்தார். அதன்படி தேனி மாவட்டம் போடி நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் முதலமைச்சரின் படத்தை பாஜகவினர் ஒட்ட முயன்றனர்.
அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் முதலமைச்சர் ஸ்டாலினின் படத்தை பாஜக பெண் நிர்வாகி ஒட்டினார். அப்போது போலீசார் தடுக்க முயன்றதால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் அண்ணாமலை இருக்கிறார் முடிந்ததை பாருங்கள் எனவும் அப்படித்தான் போட்டோவை ஒட்டுவோம் எனவும் கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடை முன் முதலமைச்சர் ஸ்டாலினின் படம் ஒட்டப்பட்டது. காட்டூரணி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை முன் முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை பாஜக மகளிர் அணி துணை தலைவர் கலாராணி ஒட்டினார்.
இதேபோல் கோவை மாவட்டம் அன்னூரில் பாஜக மகளிர் அணியினர் டாஸ்மார்க் கடைகள் முன்பு முதலமைச்சரின் படத்தை ஒட்டினர். அப்போது பேசிய வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் பானு, டாஸ்மாக் கடைகளால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
சென்னை மேடவாக்கத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையின் முன் முதலமைச்சர் ஸ்டாலினின் படம் ஒட்டப்பட்டது. கூட்ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு சென்ற பாஜக பெண் நிர்வாகிகள், முதலமைச்சர் ஸ்டாலினின் படத்தை ஒட்டினர்.
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாஜக மகளிர் அணியினர் முதலமைச்சரின் படத்தை ஒட்டினர். அப்போது பேசிய மகளிர் அணியைச் சேர்ந்த கமலி கணேசன், தமிழக மக்களின் உயிரை குடித்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி செய்து வருவதாக விமர்சித்தார்.
கோவை கண்ணப்பன் நகரில் உள்ள டாஸ்மார்க் கடையிலும் முதலமைச்சர் புகைப்படத்தை பாஜகவினர் ஒட்ட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்து சிவானந்தா காலனி ஆறுமுக்கு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
ஆனால் மாலை 6 மணியைக் கடந்தும் பெண்களை வீட்டிற்கு அனுப்பாமல் இருந்ததால் பாஜகவைச் சேர்ந்த ஏராளமானோர் திருமண மண்டபம் முன்பு குவிந்தனர். தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் அவர்கள் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.