அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலியிடங்களை நீக்குவதற்கான கொள்கையும் இல்லை என்று கூறிய ஜிதேந்திர சிங்,
ஓய்வு வயதில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு தேசிய கவுன்சிலின் ஊழியர்கள் தரப்பிலிருந்து முறையான கோரிக்கை எதுவும் பெறப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயது வித்தியாசம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜிதேந்திர சிங், இந்த விவகாரம் மாநில பட்டியலில் இருப்பதால், அதுதொடர்பான தரவை மத்திய அரசு பராமரிக்கவில்லை என பதிலளித்தார்.