தனிநபர் வருவாய் அதிகம் என்று கூறும் அதே நேரத்தில், மானியம் பெறுவதற்காக வறுமைக் கோட்டுக்கு கீழ் 75 சதவீதம் பேர் உள்ளதாக மாநில அரசு கணக்குக் காட்டுவது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா காலத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வளர்ச்சி தொடர்பான புள்ளி விபரங்களை அளிக்கும்போது தனிநபர் வருவாய் அதிகமாக உள்ளதாகவும், அதே நேரத்தில், 75 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர் எனவும் மாநிலங்கள் தெரிவிப்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசின் மானியம் பெறுவதற்காக, மாநில அரசுகள் ரேஷன் கார்டுகளை தாராளமாக வினியோகித்து வருகின்றனவா எனவும் வினவிய நீதிபதிகள், உண்மையான பயனாளிகளுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.