சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேச்சுக்கு முதலமைச்சரும், சபாநாயகரும் கண்டனம் தெரிவித்தனர்.
சாதிவாரி கணக்கெடுப்பைத் தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும் எனக்கூறிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வேல்முருகன், சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டார். இதையடுத்து அமைச்சர்கள் இருக்கையை நோக்கி நடந்து சென்று, கை நீட்டியபடி அவர் பேசியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
வேல்முருகனின் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். வேல்முருகன் அவை மரபு மீறி நடந்து கொள்வதாகக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அவர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையடுத்து, வேல்முருகன் இருக்கையை விட்டு எழுந்து சென்று, மிரட்டும் தொனியில் பேசுவதை ஏற்க முடியாது எனக் கண்டனம் தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, அவருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார்.