கோவை மாவட்டம் ஆலாந்துறையில் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க லஞ்சப் பணத்துடன் குளத்தில் குதித்த கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், வாரிசு சான்றிதழ் கோரி இ -சேவை மையம் மூலம் விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாக மத்வராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலைச் சந்திக்கச் சென்றபோது அவர் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கிருஷ்ணசாமி புகாரளித்த நிலையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெற்றிவேலிடம் வழங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அவ்வாறு கிருஷ்ணசாமி வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெற்றிவேலைப் பிடிக்க முயன்றனர்.
அப்போது அதிகாரிகளிடம் இருந்து தப்ப, வெற்றிவேல் குளத்தில் குதித்தார். பின்னர் அவரை மடக்கிப் பிடித்து காவல்துறை கைது செய்தனர். இதையடுத்து வெற்றிவேலை பணியிடை நீக்கம் செய்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார்.