தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணடைந்த தமிழக ராணுவ வீரரின் உடல் 24 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணியாற்றிய இவர் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்தார்.
வினோத்குமாரின் உடல் வெம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு ராணுவத்தினர் மற்றும் காவல்துறை மரியாதையுடன் அவரது மனைவி நர்மதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் வினோத்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து வினோத்குமாரின் உடல் 24 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.