இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளைஞர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தி வந்த வடமாநில இளம்பெண் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
பல்லாவரம் அருகே திரிசூலம் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் வைத்திருந்த பையில் 3 கிலோ கஞ்சா இருந்ததை அறிந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கைதான பெண் திரிபுராவைச் சேர்ந்த பாயல் தாஸ் என்றும், அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும் தெரியவந்தது. உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்களுடன் பழகி அவர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.
மேலும், திரிபுராவில் ஒரு கிலோ கஞ்சாவை 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, சென்னையில் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இளம்பெண்ணை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.