உலக சிட்டுக் குருவிகள் தினத்தையொட்டி நெல்லையின் பல்வேறு பகுதிகளில் சிட்டுக் குருவிகளுக்கு கூடுகள் வைக்கப்பட்டன.
அழிந்து வரும் சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்கும் நோக்கில் உலக சிட்டுக்குருவி தினம் மார்ச் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முந்தைய காலங்களில் வீடுகளில் காணப்படும் பரண், மாடம், விட்டம், ஓடுகளின் இடைவெளிகளில், காற்றுக்காக விடப்படும் பொந்துகளில்தான் சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகள் சிறுகூடு கட்டி வசிப்பது வழக்கமாக இருந்துவந்தது.
தற்போதைய காலகட்டத்தில் கட்டிடங்கள் பெரிதாகின. மரங்கள் குறைந்தன. வீடுகளில் குளிர்சாதன வசதி உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் மேம்பட்டுவிட்டன. இப்படி அறிவியல் தொலைபேசி கோபுரங்கள் என வளர்ச்சியால் குருவிகளுக்கு நம் வீடுகள் அந்நியமாகிவிட்டன.
இந்த நிலையில் சிட்டு குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் சிட்டுக்குருவி சமூகம் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் சிட்டு குருவிகளுக்கான கூடு அமைக்கும் பணி நடைபெற்றது. இதுகுறித்து பேட்டியளித்த சமூக ஆர்வலர்கள், சிட்டு குருவிகள் மனிதர்களோடு வாழ்ந்தது என்றும் ,சிட்டு குருவிகள் அழிவதால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதாகவும் சிட்டுக் குருவியை பாதுகாப்பது இயற்கையை வளர்ப்பதற்கு சமம் என தெரிவித்தனர்.