அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம் பசந்த், ருமானி போன்ற பிரபலமான மாம்பழ வகைகள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தினாலும், ஒரு பெண் விவசாயி, மியாசாகி மாம்பழங்கள் ஒவ்வொன்றையும் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். ஒரு மாம்பழம் 10 ஆயிரம் ரூபாயா ? அப்படியென்ன சிறப்பு மியாசாகி மாம்பழத்தில் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மியாசாகி மாம்பழம் ஜப்பானின் கியூஸு மாகாணத்தில் உள்ள மியாசாகி நகரத்தில் உருவானதாகும். 1980ம் ஆண்டு உள்ளுர் விவசாயிகளுடன் சேர்ந்து மியாசாகி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பழைய வகை இனப் பெருக்க நுட்பங்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் விளைவாக மியாசாகி மாம்பழம் கண்டுபிடிக்கப் பட்டது. பிரகாசமான நிறத்துடன் தனித்துவமான முட்டை வடிவத்துடன் விளங்கும் மியாசாகி மாம்பழம் சூரியனின் முட்டை என்று அழைக்கப் படுகிறது.
இது சுவையானது மட்டுமில்லாமல் நீண்ட ஆயுளையும் கொண்டுள்ளது. இதில் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளன. அவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கின்றன. கண் பார்வைக்கும், சீரான செரிமானத்த்துக்கும் உதவுகின்றன.
இந்த மியாசாகி மாம்பழம் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழமாகக் கருதப்படுகிறது. ஜப்பானில், மியாசாகி மாம்பழத்தின் சில்லறை விலை சுமார் 8600 ரூபாய் ஆகும். ஜப்பானில் ஒரு டஜன் மியாசாகி மாம்பழங்கள் கொண்ட ஒரு பெட்டி சுமார் இரண்டரை லட்சம் வரை விற்கப் படுகிறது.
சமீபத்தில், (Nanded)நாந்தேட்டில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, தானிய விழா அரசு சார்பில் நடத்தப் பட்டது. இந்த நிகழ்வில், விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் சுமார் 82 கடைகள் அமைக்கப் பட்டிருந்தன. இந்த விவசாய கண்காட்சியில், மியாசாகி மாம்பழங்களைக் கொண்டு வந்த சுமன்பாய் என்பவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
தெலுங்கானாவில் உள்ள போசி கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சுமன்பாய் கெய்க்வாட்டின் மகன் நந்த்கிஷோர் UPSC தேர்வுகாக தயாராகி கொண்டிருந்தார். கோவிட் தொற்று நோய் காலத்தில், ஊரடங்கு காரணமாக பயிற்சி நிறுவனம் மூடப்பட்டதால், தனது கிராமத்துக்குத் திரும்பிய நந்த்கிஷோர் ஆன்லைனில் படிப்பைத் தொடர்ந்தார். ஒருநாள், தற்செயலாக மியாசாகி மாம்பழங்கள் பற்றிய தகவல்களை இணையத்தில் பார்த்துள்ளார்.
மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் ஏற்கெனவே, மியாசாகி மாம்பழங்களை விவசாயம் செய்து வருவதை அறிந்தார். அதன் பிறகு, சிறிய அளவில் சாகுபடி செய்வதற்காக மியாசாகி மரக்கன்றுகளை வாங்கி, தனது தாயாரிடம் கொடுக்க முடிவு செய்தார்.
பிலிப்பைன்ஸிலிருந்து 10 மியாசாகி மரக்கன்றுகளை தலா 6500 ரூபாய்க்கு ஆன்லைனில் வாங்கி விவசாயியான அம்மாவுக்கு பரிசளித்தார். இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு மாமரமும் சராசரியாக 12 மாம்பழங்களை உற்பத்தி செய்துள்ளன.
ஏற்கெனவே, மியாசாகி மாம்பழ வணிகத்தில் லாபம் பார்த்து கொண்டிருக்கும் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி வார்புட்கரின் ஆலோசனையில், ஒரு மாம்பழத்துக்கு 10,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மியாசாகி மாம்பழத்தை மற்ற விவசாயிகளும் சாகுபடி செய்ய முன் வந்துள்ளனர்.