உலகின் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடராக கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக் 18-வது சீசன் இன்று கொல்கத்தாவில் துவங்குகிறது. உலகளவில் தனி ரசிகர் பட்டாளத்தைத் தக்க வைத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டள்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என பத்து விதமான அணிகள் பங்கேறும் ஐபிஎல் தொடருக்கு உலகளவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. மஞ்சள், புளு, ஆரஞ்சு, சிவப்பு என வண்ண வண்ண ஜெர்சிகளில் பார்த்த பிரபலமான முகங்கள் அனைத்துமே கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஆக்சனில் நிறம் மாறியிருக்கின்றன. கூடுதலாக அணியும் மாறியிருக்கின்றன.
மெகா ஆக்ஷனின் போது சில நட்சத்திர வீரர்கள் அவர்களது அணியிலேயே தக்கவைக்கப்படுவார்கள் என எண்ணிய நிலையில் எதிர்பாராத பல திருப்பங்கள் நிகழ்ந்தன. லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே எல் ராகுல் டெல்லி அணிக்கும், டெல்லியின் கேப்டன் ரிஷப் பந்த், லக்னோ அணிக்கும் இடம் மாறியுள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு 13 வயது சிறுவனான வைபவ் சூர்யவண்சியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்து ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது.
மார்ச் 22 முதல் தொடங்கி, மே 25 ஆம் தேதி வரை ஐபிஎல் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியை, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் வரும் 23ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது.
18-வது சீசன் என்பதால் ஆர்சிபி அணி விராட் கோலிக்காக கோப்பை வெல்லும் என அவரது ரசிகர்களும், டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை வரிசையில் ஹாட்ரிக் கோப்பையாக மும்பை அணியை ரோகித் சர்மா வெற்றி பெறச் செய்வார் என அவரது ஆதரவாளர்களும் ஐபிஎல் போட்டியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கும் போதும் எம்எஸ் தோனியின் கடைசி ஆட்டம் இது தான் என்ற வதந்தி இந்த ஆண்டிலும் பரவிக் கொண்டிருக்கிறது. 5 ஜெயிச்சுட்டிங்க ரோகித் அண்ணா இன்னும் எவ்வளவு னும்?, 18, 18 ஈ சாலா கப் நமதே, கன்யாகுமரி தேவ சகாயம் திருப்பூர் பிரபு பவுண்டரி லைனை தாண்டி வந்து அன்பு கொடுத்ததற்கு நன்றி என ஸ்டார் பிளேயர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விளம்பரங்கள் ரசிகர்களை மேலும் டெம்ப்ட் செய்துள்ளது.
தொடக்க விழா நிகழ்வு 35 நிமிடங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெய் ஷா மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இதில் பங்கேற்க உள்ளனர். தொடக்க விழாவில் பிரபல பின்னணி பாடகர் ஷ்ரேயா கோஷல் மற்றும் பாலிவுட் நடிகை தீஷா படாணி ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வருன் தவான், ஆர்ஜித் சிங், கரன் அஜூலா, ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக மொத்தம் 18 வது ஐபிஎல் தொடர் புதிய வீரர்களுடன், புதிய கேப்டன்களுடன், புது விதமான அனுபவத்துடன் நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இனி ஒவ்வொரு மாலையும், ஒவ்வொரு வீட்டிலும் ஐபிஎல் திருவிழா மட்டுமே!