தாஜ்மஹாலை விட இரண்டு மடங்கு பெரிய சிறுகோள், மணிக்கு 77,282 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வேகமாக வருகிறது என நாசா எச்சரித்துள்ளது. வருகிற மார்ச் 26 ஆம் தேதி பூமியைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை, இந்த சிறுகோள், பூமியில் மோதினால் மொத்த உலகமும் தரைமட்டமாகும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, பல்வேறு விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பூமிக்கு அருகில் உள்ள பொருள் ஆய்வுகளுக்கான மையம், நாசாவின் பூமி பாதுகாப்புத் திட்டத்தின் முக்கிய அங்கமாகச் செயல்படுகிறது.
இந்த மையம், Pan-STARRS, the Catalina Sky Survey, and NEOWISE போன்ற சர்வதேச ஆய்வகங்களுடன் இணைந்து விண்வெளியில் சுற்றிவரும் சிறுகோள்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
The Goldstone Solar System Radar போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறுகோள்களின் பாதையைத் துல்லியமாக நாசா கணிக்கிறது. இதன் மூலம், பூமியைப் பாதுகாப்பாக வைத்திருக்க முன்னெச்சரிக்கைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.
அந்தவகையில், இப்போது ஒரு எச்சரிக்கையை நாசா வெளியிட்டுள்ளது. 2014 TN17 என்ற மிகப்பெரிய சிறுகோள், மணிக்கு 77,282 கிமீ வேகத்தில் பூமியை நோக்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த சிறுகோள், இந்திய நேரப்படி மார்ச் 26 ஆம் தேதி மாலை 5:04 மணிக்குப் பூமியிலிருந்து ஆறரை மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து செல்லும் என்று கூறப் பட்டுள்ளது. இந்த தூரமானது, பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட 13 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தூரம் அதிகமானதாகத் தோன்றினாலும், நெருங்கிவரும் சிறுகோளின் அளவு காரணமாக, பூமிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பூமியை நோக்கிவரும் இந்த சிறுகோள் 540 அடி அகலம் கொண்டதாகும். அதாவது, தாஜ்மஹாலை விட இரண்டு மடங்கு பெரியதாகும்.
இந்த சிறுகோள், அதன் அளவு மற்றும் சாத்தியமான ஆபத்து காரணமாக, அபாயகரமான சிறுகோள் என வகைப்படுத்தி உள்ளனர். இத்தகைய சிறுகோள், பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டதாகும்.
விண்வெளியில் உள்ள மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை மற்றும் விண்வெளிக் குப்பைகளுடன் மோதுவதால் அதன் பாதையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எதிர்பாராத தன் சுற்றுப்பாதை மாற்றத்தால், இந்த சிறுகோள் பூமியைத் தாக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். சிறுகோளின் சுற்றுப்பாதை விலகல் பூமிக்குப் பேரழிவைத் தரும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
சிறுகோள் பூமியை மோதினால், அது நூற்றுக்கணக்கான அணுக்குண்டுகளுக்குச் சமமான ஆற்றலை வெளியிடும் என்றும், மொத்த உலகமும் தரைமட்டமாகும் என்றும், மிகப்பெரிய தீ புயல்களைத் தூண்டும் என்றும், மிகப் பெரிய உலகளாவிய காலநிலையைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
ஏற்கெனவே,1908 ஆண்டு, சிறுகோளின் சுற்றுப்பாதை விலகல், 2,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சைபீரியக் காடுகளைத் தரைமட்டமாக்கியது. எனவே, மார்ச் 26 ஆம் தேதி பூமியை நெருங்கி வரும் இந்த மிகப்பெரிய சிறுகோளைத் துல்லியமாக விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர்.