அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
அரியலூரில் கடந்த 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில் ரயில் மறியலில் ஈடுபட்டதற்காக அமைச்சர் சிவசங்கர் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் உடனடி அபராதம் விதிக்கலாம் என யோசனை வழங்கிய நீதிபதி, அமைச்சர் சிவசங்கர் மீதான இரண்டு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.