தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றதைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் திமுக அரசைக் கண்டித்து வீடுகளுக்கு முன்பு கருப்பு கொடியை ஏந்தியபடி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் கண்களில் கருப்பு துணியைக் கட்டியும், திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கருப்பு சட்டை அணிந்து கொண்டும், கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறை கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூரில் பா.ஜ.க சார்பில் கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. பா.ஜ.க கிளை தலைவர் கணேசமூர்த்தி இல்லத்தில் திரண்ட நிர்வாகிகள் தமிழக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர். மதுபான ஊழலை மறைக்கக் கூட்டம் நடைபெற்றிருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இதேபோல கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பா.ஜ.க., சார்பில் தமிழக அரசைக் கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவினர் பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.