திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் வசதிக்காகப் புதிதாக கட்டப்பட்ட கழிவறையில், பொருட்கள் மாயமானது குறித்து பாஜக பிரமுகர் வீடியோ வெளியிட்ட நிலையில், அதிகாலையில் பாஜக பிரமுகரின் வீட்டிற்கு காவல்துறை சென்றதால் குடும்பத்தினர் அச்சமடைந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோயில் அருகே புதிதாகக் கட்டப்பட்ட கழிப்பிடம் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாஜக மத்திய அரசு நலப்பிரிவு தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் பிரித்திவிராஜன், கழிப்பறையில் அனைத்து பொருட்களும் சேதமடைந்து, பல பொருட்கள் காணாமல் போனதாகக் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், பாஜக பிரமுகர் பிரித்திவிராஜன் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது வீட்டிற்கு அதிகாலை 4 மணிக்குச் சென்ற போலீசார், விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்திருப்பதாக கூறினர். வாரண்ட் இருக்கிறதா என குடும்பத்தினர் கேட்ட போது, போலீசார் பதிலளிக்காமல் இருந்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த காவல்துறை அதன்பின் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.