தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து சிறுவர்கள், மாணவர்கள் எனப் பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவும் அறிமுகமாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அது என்ன ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…?
உதகையில் நடைபெற்ற ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய இவர்கள் சில நாட்களுக்கு முன்பு காவல்துறையிடம் சிக்கினர்.
உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் புதிய வகையான கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வளர்க்கப்பட்ட விலை உயர்ந்த கஞ்சா என்பதையும் காவல்துறை கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு 1 கிலோ, 1 கோடி ரூபாய் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் தகவல்.
கைதானவர்களிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கர்நாடகா மாநிலத்திலிருந்து ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவைக் கொண்டு வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து கர்நாடகா சென்ற தனிப்படை காவல்துறை அங்கு ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்களைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மண்ணை பயன்படுத்தாமல் தண்ணீரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சாகுபடி செய்யப்படும் நீரியல் முறையே ஹைட்ரோபோனிக்ஸ் விவசாய முறை எனப்படுகிறது. இந்த முறையில் வீட்டுக்குள்ளேயே பல்வேறு தாவரங்களைப் பலரும் வளர்த்து வரும் நிலையில், இந்த தொழில்நுட்பத்தைச் சட்டவிரோத கஞ்சா சாகுபடிக்கு சில கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன. வழக்கமான கஞ்சாவைக் காட்டிலும் இந்த முறையில் வளர்க்கப்படும் கஞ்சாவில் போதை மூலக்கூறுகள் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதால் இதன் விலையும் மிக அதிகம். ஒரு கிலோ கஞ்சா ஒரு கோடி ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பதுதான் மேலும் அதிர்ச்சி.
கஞ்சாவிற்கு இளைஞர்கள் அடிமையாகக் கூடாது எனவும், விளையாட்டு, புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடி கட்டிப் பறக்கும் நிலையில், தற்போது புதிய வகையிலான ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா விற்பனையும் நடைபெற்றிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.