உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க தேசிய அளவிலான செயற்குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மாணவர்களின் நலன் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு கல்வி நிறுவனங்களே பொறுப்பு என்று அறிவுறுத்திய நீதிபதிகள், ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அங்கு பயிலும் மாணவர்கள் தங்கள் மீது எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை, பயமின்றி இங்கு நாம் படிக்கலாம் என்பதை உணர வழிவகை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இதையடுத்து முன்னாள் நீதிபதி ரவீந்திர பட் தலைமையில் 9 பேர் அடங்கிய தேசிய அளவிலான செயற்குழு அமைக்கப்பட்டது. மாணவர்கள் தற்கொலை விவகாரத்தில் இந்த செயற்குழு உரிய விசாரணை நடத்தி 4 மாதங்களில் இடைக்கால அறிக்கையும், 8 மாதங்களில் விரிவான அறிக்கையும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த குழுவுக்கு 20 லட்சம் ரூபாய் ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.