ஜாமின் பெற்ற கைதிகள் சிறையில் இருந்து வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது மனித உரிமை மீறல் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஜாமின் வழங்கப்பட்ட பின்னரும் பிணைத்தொகை செலுத்துவது உள்ளிட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல், 800-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருப்பதாக பத்திரிகைகளில் செய்து வெளியானது.
அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராம் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிறையில் உள்ள ஜாமின் பெற்ற கைதிகள் தொடர்பாக அறிக்கை பெறப்பட்டு, அவர்களை வெளியே கொண்டு வரும் நடவடிக்கைகள் தினசரி அடிப்படையில் நடந்து வருவதாக தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் ஜாமின் பெற்ற பிறகும் சிறையில் உள்ள கைதிகள் குறித்த விவரங்களை சட்டப்பணிகள் ஆணையத்திடமோ, சம்மந்தப்பட்ட வழக்கறிஞர்களிடமோ பகிர்ந்துகொள்ள வேண்டும் என சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.
மேலும், ஜாமின் வழங்கப்பட்டவர் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், ஜாமின் பெற்ற பிறகும் கைதிகள் சிறையில் இருந்து வெளிவர தாமதமாவது மனித உரிமை மீறல் என கருத்து தெரிவித்தனர்.
அத்துடன், ஜாமின் பெற்ற கைதிகள் சிறையில் இருப்பதை தவிர்க்கும் வகையில் நடைமுறையை பின்பற்றுமாறு, சிறை அதிகாரிகளுக்கும், சட்ட பணிகள் ஆணையத்திற்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.