கச்சத்தீவை மீட்கக் கோரிய வழக்கில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவையும் மனுதாரராக சேர்த்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை செப்டம்பருக்கு ஒத்திவைத்தது.
கச்சத்தீவை மீட்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், கருணாநிதியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருவரும் மறைந்த நிலையில், அவர்களது வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
அதே நேரத்தில், அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. கச்சத்தீவை மீட்கக் கோரிய வழக்கு கடைசியாக 2020ஆம் ஆண்டு விசாரிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கருணாநிதி மறைந்து விட்டதால் டி.ஆர்.பாலுவை மனுதாரராக சேர்க்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, டி.ஆர்.பாலுவை மனுதாரராக சேர்த்துக்கொண்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.