சென்னையில் ஒரு மணி நேரத்தில் 8க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைகாலமாக தலைநகர் சென்னையில் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. இதனால் மொத்தமாக 20 சவரனுக்கும் மேலான நகைகள் பறிபோய் உள்ளன.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் விமானம் மூலம் ஹைதராபாத் தப்பிச்செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் இருவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுராஜ், ஜாஃபர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.