கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இரவில் வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்காமல் செவிலியர்கள் அலட்சியம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.
புதுப்பட்டு ஆரம்பச் சுகாதார நிலையம் மூலமாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இரவு நேரத்தில் சிகிச்சைக்காக மக்கள் செல்லும்போது கதவைப் பூட்டிக் கொண்டு செவிலியர்கள் உறங்குவதாகவும், பலமுறை தட்டியும் கதவைத் திறக்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், அக்கிராமத்தைச் சேர்ந்த பாக்யராஜ் என்ற மாற்றுத்திறனாளி தனது மகளை இரவில் அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பலமுறை அழைத்தும் செவிலியர்கள் கதவைத் திறக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.