இந்தியாவில் எம்.பிக்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பிறநாடுகளில் எம்.பிக்கள் பெறும் ஊதியம் குறித்து இப்போது பார்க்கலாம்.
இந்திய நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு, வருமான வரி சட்ட 48-வது பிரிவின் கீழ் செலவு பணவீக்க குறியீட்டு அடிப்படையில், ஊதியம், தினப்படி, ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி, தற்போது மாதம் ஒரு லட்ச ரூபாய் ஊதியம் பெறும் எம்.பிக்கள் இனி, ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பெறுவார். மேலும், தினப்படி 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கப்படும்.
முன்னாள் எம்.பி.க்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.31 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருந்த எம்.பி.க்களுக்கு, அவருடைய சேவையை கணக்கில் கொண்டு ஒவ்வோர் ஆண்டுக்காகவும் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
இவைவெல்லாம் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இவை மட்டுமின்றி, ஆண்டுதோறும் தொலைபேசி, இணையதள பயன்பாடு, அலுவலகம், வீடு, விமான பயண வசதி மற்றும் படிகளும் வழங்கப்படுகின்றன. சராசரி இந்தியரின் மாத வருமானத்துடன் ஒப்பிடுகையில் எம்.பிக்கள் பெறும் ஊதியம் 8 மடங்கு அதிகமாக இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன.
எம்.பிக்களுக்கு இந்தியாவில் மட்டுமல்ல பிற நாடுகளிலும் அண்மையில் ஊதியம் மற்றும் படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. சில நாடுகளில் உயர்த்தப்படவும் உள்ளன. இதன்படி, பிரிட்டனிலும் ஏப்ரல் மாதத்தில் இருந்து எம்.பிக்களுக்கான ஊதியம் உயர்ந்து, ஆண்டிற்கு 91, 346 பவுண்ட்ஸ் ஊதியம் பெற்ற, அந்நாட்டு எம்.பிக்கள் இனி 93, 904 பவுண்ட்ஸ் பெறுகிறார்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1.04 கோடி ரூபாய் மற்றும் பிற சலுகைகளைப் பெறுவார்கள்.
அமெரிக்காவைப் பொருத்தவரை இரு அவை உறுப்பினர்களுக்கு ஆண்டிற்கு 1,74, 000 டாலர் என இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ஊதியம் பெறுகிறார்கள். பிற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டிற்கு CAD எனப்படும் கனடா டாலரில் 2,03, 100 டாலர், இந்திய மதிப்பில் சுமார் 1.2 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கு எம்.பிக்களை விட இரண்டு மடங்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது.
இதன்படி, கனடா பிரதமர் 4 லட்சத்த 6, 200 டாலர், அதாவது 2.5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகருக்கு 96, 800 டாலர் கூடுதலாக அளிக்கப்படுகிறது. தற்போதுள்ள ஊதிய விகித்தை விரைவில் உயர்த்தவும் திட்டமிடப்படுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஜூலையில் எம்.பிக்களுக்கான ஊதியம் 3.5 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதன்படி தற்போது, ஆண்டுக்கு 2 லட்சத்து 33 ஆயிரத்து 650 ஆஸ்திரேலிய டாலர் தொகையினை ஊதியமாக பெறுகிறார்கள். இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாய் ஊதியம் பெறுகிறார்கள். அதேநேரத்தில், அந்நாட்டு பிரதமருக்கு 3.3 கோடி ரூபாயும், எதிர்க்கட்சித் தலைவருக்கு 2.3 கோடியும் ஆண்டு ஊதியம் வழங்கப்படுகிறது.
பாகிஸ்தானில் அண்மையில் எம்.பிக்கள், அமைச்சர்களுக்கான ஊதியம் 188 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதன்படி, அமைச்சர்களுக்கான ஊதியம் 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.பிக்களுக்கும் ஊதியமாக 1.50 லட்சம் வழங்கப்படுகிறது.
ஜப்பானில் எம்பிக்களுக்கு ஆண்டிற்கு 25.3 மில்லியன் யென் வழங்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் 1.4 கோடி ரூபாய் பெறுகிறார்கள்.