ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்து தலைவராகி உள்ளதாகத் திருப்பூர் சாமலாபுரம் பேரூராட்சி திமுக தலைவர் பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சாமலாபுரம் பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த விநாயகா பழனிச்சாமி பதவி வகித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து 13 வார்டு உறுப்பினர் பெரியசாமி, விநாயகா பழனிச்சாமியிடம் செல்போனில் பேசும் சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், தனக்குக் கிடைத்த பணத்தில் பாதியைப் பேரூராட்சி செயலாளருக்குக் கொடுத்ததாகவும் மீதம் உள்ளதைத் தான் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்து தலைவராகி உள்ளதாகக் கூறிய பழனிசாமி, அடுத்த 2 ஆண்டுகளில் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டுமெனவும் பேசியுள்ளார். மேலும், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவரைச் செருப்பால் அடியுங்கள் எனவும் அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.