டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அமைக்க உள்ள கூட்டணி குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
அப்போது தமிழகத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக அவர் அமித்ஷாவிடம் மனு அளித்ததாகவும், 2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து கலந்தாலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.