100 நாள் வேலைத் திட்டத்தில் உத்தரப்பிரதேசத்தை விட தமிழகத்துக்குத்தான் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிலுவைத் தொகைக்காகத் தமிழகம் காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார்.
இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி, நடப்பாண்டில் தமிழகத்திற்கு 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இது முன்பு ஒரு நிதியாண்டில் உத்தரப்பிரதேசத்திற்கு வழங்கியதை விடக் கூடுதல் நிதி எனவும் தெரிவித்துள்ளார். அதாவது 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்திற்கு 10 ஆயிரம் கோடிக்கு அதிகமாகவும், 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்திற்குக் கிட்டத்தட்ட 10 கோடியும் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் பாரபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் மத்திய அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி விளக்கமளித்துள்ளார்.