திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் 6 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போராட்டத்தால் மூன்று லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசு உடனடியாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஏராளமான விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நூல் மற்றும் நாடா நூல் பெற்று அதனைத் துணியாக நெசவு செய்து கொடுத்து அதற்காக விசைத் தறி உரிமையாளர்கள் பணம் வாங்கிக் கொள்கின்றனர்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் இது நடைமுறையிலிருந்து வருகிறது. விசைத்தறி உரிமையாளர்கள் ஒரு மீட்டர் காடா துணி நெய்து கொடுத்தால் அவர்களுக்குக் குறிப்பிட்ட தொகை கூலியாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்படும் கூலி போதுமானதாக இல்லை என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் அரசு தரப்பு பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது ஒப்பந்தம் செய்த கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்காமல் குறைத்து வழங்குவதாக விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர். மின்கட்டணம், விலைவாசி உள்ளிட்டவை அதிகரித்துள்ள நிலையில் தங்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஊதியம் போதுமானதாக இல்லை எனவும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 10 ஆயிரம் விசைத்தறிக்கூடங்களில் உள்ள 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆறு நாட்களில் 180 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வேலை நிறுத்தப் போராட்டத்தால் விசைத்தறி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள மூன்று லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து தவிக்கின்றனர்.
பேச்சுவார்த்தை மூலம் தமிழக அரசு போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் எனவும் விசைத்தறியை நம்பி உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த தலைமுறைக்கு விசைத்தறி தொழில் என்பதே இருக்காது எனக் குமுறல் எழுந்துள்ளது. உடனடி நடவடிக்கை மேற்கொண்டு விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.