தனது வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் சனாதன இந்து தர்ம கலாச்சாரமே அடிப்படை என்று அமெரிக்காவின் FBI தலைவரான காஷ் படேல் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியினரான அவரது கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.
இந்திய வம்சாவளியினரின் மகனான 45 வயதான ‘காஷ்’ படேல், இப்போது அமெரிக்காவில் மிகவும் சக்திவாய்ந்த FBI தலைவராக உள்ளார். தனது தலைமைப் பண்புக்கு இந்து கலாச்சார மதிப்பீடுகள் எப்படி உதவின ? என்பதை காஷ் படேல் விளக்கியிருக்கிறார்.
அமெரிக்க அரசியல் போர்க்களத்தில் ஒரு இந்துப் போர் வீரன் என்ற தலைப்பில் ‘காஷ்’ படேலின் கட்டுரையை அமெரிக்காவின் India Tribune என்ற இணையச் செய்தி இதழ் வெளியிட்டுள்ளது.
1893ம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக மத மாநாட்டில், சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் கருத்துக்களை உள்ளடக்கியதாக அந்த கட்டுரை அமைந்திருக்கிறது.
இந்தக் கட்டுரை, புலம்பெயர்ந்த இந்து குடும்பத்தின் எளிமையான தொடக்கத்திலிருந்து அமெரிக்க அரசின் உயர் பதவிகள் வரை காஷ் படேலின் பயணத்தை விவரிக்கும் இந்த கட்டுரை, அவரது வாழ்க்கையில் இந்து மதம் ஏற்படுத்திய செல்வாக்கு பற்றி விரிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது.
குறிப்பாக, Deep State-க்கு எதிரான உறுதியான போராட்டத்துக்கும், இந்துமத கலாச்சாரமே தனக்குத் துணிவைத் தந்ததாக காஷ் படேல் கூறியிருக்கிறார். ஏற்கெனவே, FBI தலைவராகப் பதவியேற்றபோது, பைபிளுக்குப் பதிலாக பகவத்கீதையின் மீது சத்திரியப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
அதன்பிறகு, உலகத்தின் மிகப் பெரிய தேசமான அமெரிக்காவின் FBI- யை, முதல் தலைமுறை இந்தியர் வழி நடத்த உள்ளதாகப் பெருமிதத்துடன் கூறியிருந்தார். மேலும், தனது பெற்றோரை, ‘ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா’ என்று வாழ்த்தி வரவேற்று, செனட் நீதித்துறை குழுவின் முன் அறிமுகப்படுத்தி வைத்த காஷ் படேல், பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்று வாழ்த்துவதிலிருந்து, தனது பெற்றோரின் ஆசிகளைப் பெறுவது வரை, காஷ் படேல், தனது இந்தியப் பாரம்பரியத்தை விட்டுவிடாமல் வைத்திருக்கிறார்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், தனது இந்தியப் பாரம்பரியம் மற்றும் இந்து மதிப்பீடுகளே தனது வாழ்க்கையின் வெற்றிக்குக் காரணம் என்று காஷ் படேல் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார்.
காஷ் படேலின் தந்தை பிரமோத் படேல், 1972ம் ஆண்டு இடி அமீனின் கொடூரமான ஆட்சியின் போது உகாண்டாவை விட்டு வெளியேறி, இந்தியாவில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு அமெரிக்காவில் குடியேறினார். அதே நேரம் தான்சானியாவை சேர்ந்த காஸ் படேலின் தாயார் அஞ்சனாவும் நியூயார்க்கு வந்தார்.
1980-ல் நியூயார்க்கில் குஜராத்தி பெற்றோருக்குப் பிறந்த காஷ் படேல், ஒரு பாரம்பரிய இந்து கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த காரணத்தால், படேலின் குழந்தைப் பருவம் இந்து மதத்தின் நடைமுறைகள், பண்டிகைகள் மற்றும் ஒழுக்க போதனைகளால் நிறைந்திருந்தது.
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி, தொழில் வாழ்க்கையிலும் இந்து மத மரபுகளே நல்ல வழிகாட்டியாக உள்ளன என்று காஷ் படேல் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
ஒரு வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய காஷ் படேல், கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல சிக்கலான நிதி குற்ற வழக்குகளைக் கையாண்டிருக்கிறார்.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகவும், நிரந்தர புலனாய்வுத் தேர்வுக் குழுவின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றிய காஷ் படேல், தனது கையில் இந்துமத புனித நூலைக் கட்டி இருப்பதும், இந்து பண்டிகைகளை முறையாகக் கொண்டாடுவதும்,அடிக்கடி கோயில்களுக்குச் செல்வதும் என இந்து பாரம்பரியத்தைக் கடைப் பிடித்து வருகிறார்.
அயோத்தியில் ராமர் கோவிலை ஆதரிப்பதும் , சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டுவதும் இந்தியாவை மத சார்புடைய நாடு என விமர்சிக்கும் மேற்கத்திய ஊடகங்களைக் கண்டிப்பதும் என எதுவாக இருந்தாலும் காஷ் படேல் தனது கலாச்சார வேர்களைப் பாதுகாத்து வருகிறார்.
இந்து தர்மம், வேதம் சொல்லும் கர்மா மற்றும் சேவையின் மதிப்புகளின் அடிப்படையில், நீதியின் கடமை, மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய செயல் மற்றும் தன்னலமற்ற சேவை எனத் தனது வாழ்க்கையை வடிவமைத்துள்ளார் காஷ் படேல்.
அமெரிக்கராக இருப்பதும் இந்துவாக இருப்பதும் முரண்பாடான அடையாளங்கள் அல்ல என்பதை காஷ் படேல் நிரூபித்துள்ளார். ஒரு மதச்சார்பற்ற அரசை வழிநடத்தும் அதே வேளையில், தனது இந்துமத பின்னணி மற்றும் மதிப்புகளின் வழி நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.