திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே முன்விரோதம் காரணமாக மூன்றரை வயதுக் குழந்தையைக் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளங்களூர் பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் – பெர்லின் சந்தியா தம்பதியின் மூன்றரை வயது குழந்தை ஜெர்சன், இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் குழந்தை வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த தாய் சந்தியா அருகேயுள்ள கிணற்றுக்குள் பார்த்துள்ளார்.
அப்போது கிணற்றில் ஜெர்சன் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சந்தியா, கிணற்றுக்குள் குதித்து மகனை மீட்க முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஜேக்கப், மனைவி, மகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்விரோதம் காரணமாக அண்டை வீட்டை சேர்ந்த ஜானி மில்டன் என்பவர் குழந்தையைக் கிணற்றுக்குள் தள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.