வக்பு சட்டத்திருத்திற்கு எதிரான அரசினர் தீர்மானத்தின் மீது திமுக மற்றும் பாஜக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர் மானத்தின் மீது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இஸ்லாமியர்களோடு பிற்படுத்தப்பட்ட மக்களும் முன்வர வேண்டும் என்பதற்காக வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இஸ்லாமியர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கக் கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை நீர்த்துப்போகும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.
வக்பு வாரிய சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாகச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாவுக்குப் பேச அனுமதி வழங்கவில்லை என்றும், ஆனால், சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரும்போது அதன் செயலாக்கத்தன்மையை யோசிக்க வேண்டும் என்றும், மாநில அரசைப் போலவே மத்திய அரசுக்கும் அதிகாரம் உள்ளது எனவும் வானதி சீனிவாசன் பதிலளித்தார்.
பேரவையில் கொண்டுவரப்பட்ட இருமொழிக் கொள்கை தொடர்பான தீர்மானத்தைதான் நாடாளுமன்றே ஏற்றது என சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்கிறது என தெரிவித்தார்.