தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து அரசாணை பிறப்பிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மருத மலை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்த உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சி மாநிலச் செயலாளர் விஜயராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், தமிழ்நாட்டில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி விண்ணப்பிப்பது வருந்தத்தக்கது எனக் குறிப்பிட்டு, தமிழில் குடமுழுக்கு நடத்துமாறு கடந்த 2020-ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது சுட்டிக்காட்டப்பட்டது.
மதுரை கிளையின் உத்தரவு அடிப்படையில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அளித்த மனு மீது இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மருத மலை முருகன் கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்துவது தொடர்பான வழக்கு வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வரவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக அரசாணை பிறப்பிப்பது பற்றி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இது தொடர்பாகத் தமிழக அரசின் பதிலை அறிந்து தெரிவிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டது.
மேலும், மருத மலை முருகன் கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்துவது தொடர்பாகத் தொடரப்பட்ட மற்ற வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து வெள்ளிக் கிழமை விசாரணைக்குப் பட்டியலிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.