வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை டெல்லி நீதிமன்றம் நீக்கியதையடுத்து திரையரங்குகளில் படம் வெளியானது.
பண்ணையாரும் பத்மினியும், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் வீர தீர சூரன்.
இப்படத்திற்கு நிதி வழங்கியதால் படத்தின் பெரும்பாலான உரிமைகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்களின் அனுமதியைப் பெறாமல் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டதாகவும் கூறி IVY ENTERTAINMENT PRIVATE LIMITED என்ற நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கானது நீதிபதி மன்மீத் பிரிதம் சிங் அரோரா முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் உடனடியாக சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு 7 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், படத்தை வெளியிட 4 வாரங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செட்டில்மெண்ட் முடிவுக்கு வந்துள்ளதாகத் தயாரிப்பாளர் ஷிபு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், வீர தீர சூரன் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட இயக்குநர் அருண்குமார், திரைப்படத்தைப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்த விக்ரம் ரசிகர்கள் மற்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்டார். மேலும், மாலை 6 மணிக்குத் திரைப்படம் வெளியாகும் எனத் தெரிவித்தார்.