தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
நாட்டின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் குடியேற்ற மசோதா-2025 பூர்த்தி செய்யும் எனத் தெரிவித்தார். இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணர்வதாகத் தெரிவித்த அமித்ஷா, இந்தியாவில் நுழையும் அனைத்து வெளிநாட்டினரையும் கண்காணிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் எந்தவித நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ள முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறிய அவர், தேசத்தின் பாதுகாப்பில் குடியேற்றமும் முக்கிய அங்கமாகக் கருதப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க யாராவது வந்தால், அவர்கள் எப்போதும் வரவேற்கப்படுவார்கள் எனவும் அமித்ஷா தெரிவித்தார்.