நெல்லையில் சாதிக் கொடியைக் கையில் ஏந்தியபடி கல்லூரி வாசலில் நின்று அடாவடியில் ஈடுபட்ட மாணவர்களின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் நேற்று கராத்தே செல்வின் நாடார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், சாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும் அவரது நினைவிடத்தில் மாலை மற்றும் மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையே பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பல மாணவர்கள் கையில் சாதிக் கொடியை ஏந்தியபடி இருசக்கர வாகனங்களில் வேகமாகச் சென்று பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்களும் அரங்கேறின.
தொடர்ந்து அதே மாணவர்கள் மற்றொரு கல்லூரியின் வாசலில் நின்று கூச்சலிட்டபடி அடாவடியில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சாதி கட்சிகள் மாணவர்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்கின்றனவா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இது தொடர்பாக 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ள போலீசார், இரு கல்லூரி முதல்வர்களையும் அழைத்து வீடியோவில் உள்ள மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.