கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்ப அலை தொடர்பான நோய்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று 10 இடங்களில் கோடை வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், சென்னை மீனம்பாக்கம், சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. அதேபோல் திருப்பத்தூர், கரூர் பரமத்தியில் 102 புள்ளி 2 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.
இந்நிலையில் வெப்ப அலை தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு
மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுதொடர்பான கடிதத்தில், குளிரூட்டும் சாதனங்களின் செயல்பாட்டுக்குத் தேவையான தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வெப்பத் தாக்கம் மற்றும் வெப்ப அலை தொடர்பான நோய்களை சமாளிக்க சுகாதார வசதிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இடையே வெப்ப நோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் எனவும் மாநில சுகாதாரத் துறைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.