எண்ணெய் நிறுவனங்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.பி.ஜி டேங்கர் லாரிகளை எண்ணெய் நிறுவனங்களுக்கு டெண்டர் விடுவது தொடர்பாக புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை தளர்த்தக்கோரி தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கோவையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது 2 ஆக்சில் லாரிகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், புதிய விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தங்கள் போராட்டம் தொடரும் எனக் கூறினார்.