திருச்செந்தூரில் சாதிய கொடுமையால் தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுக கவுன்சிலரின் வீடியோ முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.
திருச்செந்தூர் அருகே உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த சுடலைமாடன் என்பவர் 2023ஆம் ஆண்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
பதவி உயர்வு வழங்கப் பணம் கேட்டு பேரூராட்சி தலைவரின் மாமியார் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதால் சுடலைமான் தற்கொலை செய்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், பேரூராட்சி தலைவருடைய மாமியாரின் கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகச் சுடலைமாடன் தன்னிடம் கூறியதாக 10வது வார்டு திமுக கவுன்சிலர் ஜான் பாஸ்கர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், இந்த வழக்கு தொடர்பாக எங்கு வந்தும் சாட்சி சொல்லத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சாதிய வன்கொடுமையால் தூய்மை பணியாளர் இறந்து 2 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்காத நிலையில், இந்த வீடியோ ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.