திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால் எந்நேரமும் சிமெண்ட் மேற்கூரைகள் மாணவர்கள் மீது விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே இப்பள்ளியில் சேதமடைந்த கட்டடங்கள் 9 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டன.
இருப்பினும் இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் பயின்று வரும் கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எந்த நேரமும் சிமெண்ட் மேற்கூரைகள் மாணவர்கள் மீது விழும் அபாயம் காணப்படுகிறது.
விபரீதம் ஏதேனும் நிகழும் முன் வகுப்பறையைச் சீரமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சீரமைப்புப் பணியில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.