மதுரையில் நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியரின் காரை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள கருப்பையா என்பவருக்குச் சொந்தமான 214 சென்ட் நிலம், கடந்த 1973-ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்திற்கான நில எடுப்புக்காக 19 ஆயிரத்து 618 ரூபாய்க்கு வாங்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் கூடுதல் மதிப்பு கேட்டு கருப்பையா தரப்பினர் தொடர்ந்த வழக்கில், சென்ட் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை மாவட்ட நிர்வாகம் வட்டியுடன் தராமல் 20 லட்சத்து 5 ஆயிரத்து 754 ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக மீண்டும் கருப்பையா தரப்பில் முறையிடப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரின் கார்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் மனுதாரரின் வாரிசுகள் சேர்ந்து ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் நீதிமன்ற ஊழியர்களிடம் கூடுதல் அவகாசம் கோரி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், முழு தொகையையும் வழங்க ஏப்ரல் 7-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்சியரின் காரை ஜப்தி செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டது.