நெல்லை மாநகராட்சியில் சுகாதார சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதார சான்றிதழ் வழங்க முறையான கட்டட அனுமதி சான்று, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, உயிரி மருத்துவ கழிவுகளை கையாளும் சான்று போன்ற முன் அனுமதி சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.
நெல்லையில் 6 மாதங்களில் ஒரு சான்றிதழுக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வீதம் பெற்றுக்கொண்டு 28 தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதார சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.
இதில், பல மருத்துவமனைக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது முறையான ஆய்வு செய்யாமல் அதே மருத்துவமனைகளுக்கு சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும், தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு 37 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி நல அலுவலர் சரோஜா பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அங்கும் அவர் நேர்மையாக செயல்பட்டதற்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.