மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்காத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 600-ஐ கடந்துள்ளது.
மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கடந்த 28ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.7, 6.4 என அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில், மியன்மரின் பல பகுதிகள் மொத்தமாக உருக்குலைந்தன.
பல அடுக்குமாடி கட்டங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்ததால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல இடங்களில் மின்வசதி தடைப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மியான்மர் நாட்டில் இதுவரை ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தாய்லாந்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, “ஆப்ரேஷன் பிரம்மா” என்ற திட்டத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்து மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 60 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் மியான்மருக்கு சென்றடைந்தன.